
நடிகர் ரஜினி காந்த்துக்கென ஒரு கொள்கை கிடையாது… அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று ரசிகர்களிடம் பேசிய அவர், தான் அரசியலுக்கு வருவதும்,வராததும் ஆண்டவன் கையில் இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என யாராவது நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள் என்றும் கூறினார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு அவர் அரசியலுக்கு வர தயாராகிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகமாக கூறி வருகின்றனர்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவார், வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார். ரஜினிக்கென ஒரு கொள்கையே இல்லை என்றும் கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தை சார்ந்த அவர் தமிழரே கிடையாது என ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தற்போது அவருடைய அரசியல் பார்வையில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல்குறித்த கருத்தையெல்லாம் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார் என்றும் சுப்ரமணியன் சாமி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.