
திருவாரூர்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் 245 பேருந்துகள் ஒடிய திருவாரூரில் இப்போது வெறும் 94 பேருந்துகள்தான் ஓடுகிறது. அதுவும் தற்காலிக ஓட்டுநர்களை வைத்துதான் இயங்குகிறது என்பது தான் மக்களுக்கு பயமே.
“ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும்,
13–வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்,
போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நட்டத்திற்கு அரசே பொறுப்பேற்று அதை ஈடு செய்ய வேண்டும்” உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துகழக தொழிற்சங்கங்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய நான்கு இடங்களில் பணிமனைகள் உள்ளன. இதில் திருவாரூரில் 72 பேருந்துகள், மன்னார்குடியில் 76 பேருந்துகள், திருத்துறைப்பூண்டியில் 61 பேருந்துகள், நன்னிலத்தில் 36 பேருந்துகள் ஆக மொத்தம் 245 நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில் நேற்று 2–வது நாளாக நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் திருவாரூர் – 30, மன்னார்குடி – 31, திருத்துறைப்பூண்டி – 15, நன்னிலம் – 18 என மொத்தம் 94 பேருந்துகள் மட்டுமே ஓடின. 60 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.
தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டபோதிலும் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தால் அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததாலும் திருவாரூர் இரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அள்ளியது.