
வேலூர்
ஓகி புயலால் பாதிக்கப்பட்டு கடலில் காணாமல் போன கடைசி மீனவர் மீட்கப்படும் வரை இந்திய கடற்படையின் தேடுதல் பணி இடைவிடாது தொடர்ந்து நடைபெறும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் கடற்படை தலைமை அலுவலர் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் ஐ.என்.எஸ். இராஜாளி கடற்படை விமான தள வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் விமானிகள் பயிற்சிப் பள்ளியில் 89-வது பிரிவு விமானிகள் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் கடற்படை தலைமை அலுவலர் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் வந்திருந்தார். கடற்படை வீரர்களின் அணிவகுப்பை ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் ஏற்றுக் கொண்டார்.
இந்த விழாவிற்கு, ஐ.என்.எஸ். இராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபீஸர் கமோடர் வி.கே.பிஷரோடி தலைமை தாங்கினார்.
ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளி முதல்வர் கமாண்டர் டிஜோ.கே.ஜோசப், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மைய முதல்வர் டிஐஜி காமோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளியில் 89-வது பயிற்சிப் பிரிவில் ஒன்பது விமானிகள் பயிற்சி முடித்துள்ளனர். இதில், எட்டு இந்திய கடற்படை விமானிகள் பயிற்சி முடித்துள்ளனர்.
அனைத்துப் பயிற்சிகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட லெப்டினன்ட் அங்குர் ஜாங்ராவுக்கு கேரள ஆளுநரின் சுழற்கோப்பையும், மைதான பயிற்சிகளில் சிறந்து விளங்கி லெப்டினன்ட் டேவிஸ் இம்மானுவேல் வேடானுக்கு புத்தகப் பரிசும் வழங்கப்பட்டன.
விழா முடிந்தபிறகு ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட ஓகி புயலால் எதிர்பாராத அளவிற்கு அதிவேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகளவு இருந்ததாலேயே மீனவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
இப்புயலால் கரைக்குத் திரும்பாமல் கடலில் தத்தளித்த மீனவர்களைக் காப்பாற்ற இந்திய கடற்படை பெருமளவு ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.
பத்து கப்பல்கள், 12 கடற்படை விமானங்கள், அதிநவீன விமானமான பி8ஐ, அரக்கோணத்தில் இருந்து கொண்டுச் செல்லப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பணியில் தமிழக அரசு, கடலோரக் காவல் படையினர் முழு ஒத்துழைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். இத்தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
காணாமல் போன கடைசி மீனவர் மீட்கப்படும் வரை இந்திய கடற்படையின் தேடுதல் பணி இடைவிடாது தொடர்ந்து நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.