
வேலூர்
கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப் புலி கடந்த மூன்று நாள்களாக மாட்டுக் கொட்டகைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த நான்கு கன்றுக் குட்டிகளை கடித்துக் கொன்று வேட்டையாடி உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டை அடுத்துள்ளது அத்திகுப்பம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரபு. இவரின் நிலம் அங்குள்ள வன எல்லையில் உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அங்கு வந்த சிறுத்தை ஒன்று, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக் குட்டியை கடித்துக் கொன்றுள்ளது.
அதேபோல பக்கத்தில் உள்ள டைலர் இராதாகிருஷ்ணனின் நிலத்தில் மாட்டுக் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக் குட்டியையும், தனியார் பேருந்து நடத்துநர் விஜயரங்கனின் நிலத்தில் மாட்டுக் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக் குட்டி ஒன்றையும் அந்தச் சிறுத்தை கடித்துக் கொன்றுள்ளது.
இதில் இரண்டு கன்றுக் குட்டிகளின் இறைச்சியை அந்தச் சிறுத்தை முழுவதும் தின்றுவிட்டுச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுநாள் அதனைக் கண்ட உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில், பேர்ணாம்பட்டு வனச் சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வனத் துறையினருடன் புதன்கிழமை அங்குச் சென்று சம்பவ இடங்களைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, அவர் அக்கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், மக்கள் யாரும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் ஓட்டிச் செல்ல வேண்டாம் என்றும், விறகு எடுக்க கூட யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், ஆம்பூர் அருகே பெரியவரிகத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் பரசுராமன் (55). இவருக்குச் சொந்தமான நிலம் சின்னவரிக்கம், பெங்களமூலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இவர் தனது நிலத்தில் உள்ள கொட்டகையில் மாடுகளைக் கட்டி வைத்திருந்ததில் கன்றுக் குட்டி ஒன்றை நேற்று சிறுத்தை கடித்து கொன்று விட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் வனச்சரக அலுவலர் ஜெயபால், வனவர் கருணாமூர்த்தி, வனக் காப்பாளர்கள் காந்தராஜ், நிர்மல் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த கன்றுக் குட்டியை பார்வையிட்டனர்.
பின்னர், அதனை உடற்கூராய்வு செய்வதற்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். மாலை நேரமாகிவிட்டதால் இன்று (டிசம்பர் 15) உடற்கூராய்வு செய்யலாம் என்று கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக சிறுத்தைப் புலியின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், பல ஆடுகள், கன்றுகள் என அனைத்தையும் கடித்து கொன்றுவிடுவதாகவும் மக்கள் அச்சத்துடன் புகார் தெரிவித்துள்ளனர்.