
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சாலையோரத்தில் மர்மமான முறையில் இளைஞர் இறந்துகிடந்தது தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ், தந்தை, இரண்டு மகன்கள் என மூவரை காவலாளர்கள் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்துள்ளது மேல்நெமிலி காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (25). இவரை திங்கள்கிழமை இரவு சிலர் விளாநல்லூர் கிராமத்துக்குச் செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணாபுரம் கூட்டுச் சாலையிலிருந்து செய்யாறுக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் ஆனந்தராஜ் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர், உறவினர்கள் வந்தவாசி - ஆரணி சாலை, கிருஷ்ணாபுரம் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆனந்தராஜ் உயிரிழந்தது தொடர்பாக விளாநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (60), அவரது மகன்கள் பிரகாஷ் (27), பிரதாப் (23) ஆகிய மூவரை வடவணக்கம்பாடி காவலாளர்கள் நேற்று இரவு கைது செய்தனர்.
இதுகுறித்து காவலாளர்கள் தரப்பில் கூறப்பட்து: "விளாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதாப், நல்லாளம் கிராமத்தில் நெல் அறுவடை செய்தபோது நெல் அறுவடை இயந்திரம் சேற்றில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து, பிரதாப் உள்ளிட்டோர் ஆனந்தராஜை உதவிக்கு அழைத்துச் சென்று இயந்திரத்தை மீட்டுள்ளனர். பின்னர், பிரதாப்புக்குச் சொந்தமான டிராக்டரில் ஆனந்தராஜ் மட்டும் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், ஆனந்தராஜ் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பிரதாப், அவரது தந்தை ராஜேந்திரன், அண்ணன் பிரகாஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திற்குச் சென்று டிராக்டரை மட்டும் எடுத்துக் கொண்டு ஆனந்தராஜை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
எனவே, விபத்து சம்பவத்தை மறைத்தல், வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டு, மூன்று பேரையும் கைது செய்துள்ளோம்" என்று காவலாளர்கள் தெரிவித்துள்ளனர்.