கொளத்தூர் நகைக்டை கொள்ளையன் தினேஷ் சவுத்ரி கைது  !!  சென்னை கொண்டுவர போலீஸ் நடவடிக்கை !!!

First Published Dec 14, 2017, 10:56 PM IST
Highlights
thief dinesh sowdry arrest in jothpur


கொளத்தூரில் நகைக்கடையில் கொள்ளையடித்த தினேஷ் சவுத்ரி என்ற கொள்ளையனை ராஜஸ்தான்  காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். ஜோத்பூரில் நகைக்கடை ஒன்றில் தினேஷ் கொள்ளையடிக்க முயன்ற போது பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடையில் கடந்த மாதம் 16ம் தேதி 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக் கடையின் மேல் தளத்தில் துளைப்போட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டனர். கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன், நேற்று கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், மற்றொரு இன்ஸ்பெக்டர் உட்பட, மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுட்டுக் கொன்றதாக கருதப்படும் நாதுராமின் கூட்டாளியுமான தினேஷ் சவுத்ரி ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டான்.

ஜோத்பூரில் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்றபோது அங்கிருந்த பொது மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து நாளை தினேஷ் சவுத்ரி சென்னை கொண்டுவர போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாதுராமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்நிலையில், ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தாம்புரா கிராமத்தில், சென்னை மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சந்தோஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அவர் அம்மாநில போலீசாருடன் சம்பவம் தொடர்பாக ஆலோசனையும் நடத்தினார்.

 

click me!