
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தேனிமலை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரே அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு தொ.மு.ச மாநிலச் செயலர் க.சௌந்தர்ராஜன் தலைமைத் தாங்கினார். மண்டலத் தலைவர்கள் கே.நாகராஜன், பி.ரங்கநாதன், பி.பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தின்போது, "போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பணத்தை வைத்துக்கொண்டு கழகத்தை நடத்தக் கூடாது.
தொழிலாளர்கள் ஓய்வுப் பெற்றவுடன் பணப்பலன்கள், ஓய்வூதிய நிலுவைகளை உடனே வழங்க வேண்டும்.
பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் உடனே பேசி முடிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தொமுச, எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி உள்பட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.