
மதுரை மாவட்டம், தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் நாசர். இவரின் மகன் ஆசிர்பாரதி, மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஆசிர்பாரதி, கடந்த 13 ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை
செய்ய குதித்துள்ளார். இதனால், ஆசிர்பாரதிக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவன் ஆசிர்பாரதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தற்போது வெளியாகி உள்ளது. மாணவனின் தற்கொலை முயற்சியை பள்ளி நிர்வாகம் மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரின் தொடர் டார்ச்சர் காரணமாக ஆசிர் பாரதிக்கு மன உளைச்சல் ஏற்பட்டு, தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. மாணவன் மாடியில் இருந்து குதித்த விவகாரம் குறித்து, ஆசிர்பாரதியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். அதற்கு பள்ளி நிர்வாகம் மிகவும் அலட்சியமாக பேசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில், தன் மகனை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். ஆனால், காவல் துறை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி, அரசியல் செல்வாக்குள்ளவர்களால் நடத்தப்படுவதால், நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தயங்குவதாக மாணவனின் பெற்றோர் கூறுகின்றனர். இதையடுத்து ஏழைக்கு நீதி என்ற அமைப்பின் நிர்வாகி ராமசுப்ரமணியன், ஆசிரியர்கள் டார்ச்சரால்தான் தற்கொலைக்கு முயற்சித்தேன் என்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அந்த மாணவன் தெரிவித்துள்ளான் என்றும் இது தனிப்பட்ட ஒரு மாணவனின் பிரச்சனை என்று ஒதுக்கிவிட முடியாது என்றும் கூறியுள்ளார். அந்த பள்ளியின் கண்டிப்பான படிப்பு முறையால் பாதிக்கப்பட்டு மாணவன் இந்த முடிவுக்கு வந்துள்ளான் என்றும் இது சம்பந்தமாக ஆட்சியர், போலீஸ் கமிஷனர், மெட்ரிக் கல்வி அதிகாரி
அனைவருக்கும் புகார் கொடுத்துள்ளோம் என்றும் நடவடிக்கையை எதிர்பாக்கிறோம் என்றும் கூறினார்.