
தமிழ்நாட்டில் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் கோழி பண்ணைகள் மிக அதிகம். முட்டைக்கு பெயர் பெற்ற நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் 3 கோடி அளவிலான எண்ணிக்கையில் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்த உற்பத்தியில் 4% முட்டைகள் கேரள மாநிலத்துக்கும் , 2 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன
இவை தவிர தமிழகம் எங்கும் நாமக்கல் முட்டைகள் அனுப்பி வைக்கப் படுகின்றன. தற்போது வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அது போல், தமிழகத்தில் குளிர் சில இடங்களில் நிலவி வருகிறது. மேலும், தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்படி மழையும் குளிருமாக மாறி மாறி வருவதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. மக்களின் நுகர்வு அதிகரித்துள்ளதால், விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
நாமக்கல்லில் இருந்து வட மாநிலங்களுக்கு ஒவ்வொரு நாளும் 3 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக முட்டைக்கான தேவை அதிகரித்து, கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து முட்டையின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் இன்று முட்டை கொள்முதல் விலை 42 காசுகள் அதிகரித்து, ரூ 5.16 காசுகள் என அறிவிக்கப்பட்டது. முட்டை கொள்முதல் விலை இந்த அளவுக்கு உயர்வது வரலாற்றில் இதுவே முதல் முறை என்கிறார்கள்.