
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரமற்ற வாழைக்கன்றை விற்ற தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 141 மனுக்கள் பெறப்பட்டது. இதில், 121 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டு, விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்.
சொட்டுநீர்ப் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் வழங்க வேண்டும்.
தரமற்ற வாழைக் கன்றுகள் பயிரிட்டதால், 15 மாதங்கள் ஆகியும் வாழையில் பூக்கள் பூக்கவில்லை. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பெரிய ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட பாசன விவசாயிகளுடன் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும்.
யானைகளால் ஏற்படும் உயிர் சேதம், பயிர் சேதத்துக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
வேப்பனஅள்ளியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகளைத் தீர்க்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், “சிசு வாழை குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, தவறு கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் குறித்து கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. அரசிடமிருந்து உத்தரவு பெற்றவுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் அளிக்கப்படும்.
யானைகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில், 30 கி.மீ. தொலைவுக்கு யானை தாண்டா தடுப்பு பள்ளங்கள் அமைக்கப்படும். அத்துடன் கிரானைட் கழிவுகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்படும்” என்று விவசாயிகளுக்கு பதிலளித்தார்.