கூட்டுறவு வங்கிக்கு பணம் நிறுத்திவைப்பு; பயிர்க்கடன் பெறமுடியாமல் விவசாயிகள் ஏமாற்றம்…

First Published Dec 30, 2016, 11:10 AM IST
Highlights


களியக்காவிளையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் நிறுத்தி வைக்கப்பட்டதால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனுமதித்த பயிர்க் கடனை பெற முடியாமல் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மாற்றிக் கொள்வது தடை செய்யப்பட்டது.

இதனால் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முடங்கியது.

விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி மேற்கொள்ள வசதியாக கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து பயிர்க் கடன் வழங்க தமிழக அரசு அனுமதித்து உத்தரவிட்டது. மேலும், கடன் தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இணைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், சங்க உறுப்பினர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் கணக்கு தொடங்கப்பட்டு, இதன் மூலமாக பெற்றுக் கொள்ளவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதனையடுத்து குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களுக்குப் பயிர்க் கடன் அனுமதிக்கப்பட்டு, கடன் தொகையின் ரொக்க பகுதி பற்றுச் சீட்டை களியக்காவிளையில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு கடன் தொகை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலிருந்து அனுமதிக்கப்பட்ட கடனுக்கான, தொகைகளை வழங்குவதை, களியக்காவிளை கிளை மத்திய கூட்டுறவு வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தியது.

இதனால் விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள், “வங்கியிலிருந்து வாரம் ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே பெற முடியும் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, விவசாயக் கடன் தொகையில் ஒரு பகுதியை கடந்த வாரம் வாங்கினோம்.

தொடர்ந்து மீதி தொகையை வாங்க வந்தபோது வங்கியில் பணம் கையிருப்பு இல்லை எனக் கூறி வங்கி நிர்வாகம் எங்களை திருப்பி அனுப்புகிறது.

கடன் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகமும், மத்திய கூட்டுறவு வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வங்கி பணியாளர்கள் கூறுகையில், “வங்கிக்கு கடந்த இரு நாள்களாக போதிய பணம் வராததையடுத்து விவசாயக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்க முடியவில்லை.

நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தி வரும் பணத்தைதான் வங்கியின் பிற வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவில் வழங்கி வருகிறோம்” என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

click me!