புதைந்து கிடக்கும் சோழர் காலத்துச் சிலையை மீட்க கோரிக்கை…

First Published Jan 6, 2017, 10:40 AM IST
Highlights


மதுராந்தகம் அருகே நெற்குன்றம் கிராமத்தில் பராமரிப்பின்றி மண்ணில் புதைந்திருக்கும் பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலத்து சமணர் சமய காலச் சிலையை மீட்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்யூரை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது நெற்குன்றம் கிராமம். இந்தக் கிராமத்தில் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சமயத்தார் வழிபட்ட தீர்த்தங்கரரின் சிலை உள்ளது.

தற்போது அந்தச் சிலையின் பாதி உருவம் மண்ணில் புதைந்தும், புதர் சூழ்ந்த நிலையிலும் காணப்படுகிறது.

இந்தச் சிலை குறித்து தொல்லியில் துறை ஆராய்ச்சியாளர்கள், “சோழர் காலத்தில் சமண சமய மக்கள் வழிபடும் வகையில் இந்தப் பகுதியில் கோயில் இருந்திருக்கலாம். பல்வேறு போரிலும், இயற்கை இடர்பாடுகளிலும் இந்தச் சிலை சிதைந்து போயிருக்கக் கூடும்.

சிலையின் மேற்புரம் இருவர் சாமரம் வீசிக் கொண்டும், முக்குடை, பிண்டிமரம், சிம்மபீடம் உள்ளிட்ட அமைப்புகளுடன் காணப்படுகிறது” என்றுத் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த கோயில ஸ்தபதி சுந்தரமூர்த்தி, “இந்தச் சிலைக்கு அருகே யாரும் செல்ல மாட்டார்கள். சிலையைத் தொட்டாலோ, அவ்வழியாகச் சென்றாலோ வயிற்று வலி வரும் எனக் கூறப்படுகிறது. இதனால் பயந்து யாரும் சிலை அருகே செல்ல மாட்டார்கள்” என்றுத் தெரிவித்தார்.

இது ஒரு பழைமை வாய்ந்த சிலை என்பதால் முழுமையான வரலாறு தெரியாமல் முள்புதர்களுக்கு இடையே பராமரிப்பின்றி இருக்கிறது. எனவே, சமண சமயத்தைச் சேர்ந்த இந்தச் சிலையை மீட்டுப் பாதுகாக்க தொல்லியில் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!