ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி பேத்தி கடத்தல் - கடத்திய பெண் 24 மணி நேரத்தில் குழந்தையுடன் பிடிபட்டார்

First Published Jan 6, 2017, 10:05 AM IST
Highlights


சென்னை சூளைமேட்டில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் ஒன்றரை வயது  பேத்தியை  கடத்தி சென்ற வேலைக்காரியை 24 மணி நேரத்தில் போலீசார் பிடித்து குழந்தையை மீட்டனர்.

சென்னை சூளைமேடு , ஜானகிராமன் காலனியில் வசிப்பவர் முனுசாமி(62) . ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. கடைசியாக நாகப்பட்டினத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மகன் சீனிவாசன் தொழிலதிபராக இருக்கிறார். மறுமகள் கோபிகா ஸ்டேட் வங்கியில் பணியாற்றுகிறார். 

இவர்களுக்கு 1.5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் பணிக்கு செல்வதால் குழந்தை தாத்தாவிடம் இருக்கும். இருந்தாலும் குழந்தையை பார்த்துகொள்ள ஒரு வேலைக்காரி வேண்டும் என்பதற்காக முனுசாமி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஆள் தேடி வந்துள்ளார்.

அப்போது மேன் பவர் நிறுவனம் நடத்தி வரும் முருகன் என்பவர் மூலம் பியூலா( 30) என்ற பெண் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். பியூலா கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவில் தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். 

அவரது தாய் தந்தையர் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தாத்தா வீட்டுக்கு வந்து செல்லும் போது செகரெடேரியட் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ்சேகர் எனபவருடன் பழக்கமேற்ப்பட்டு காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 

பின்னர் கணவருடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2016 ல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். முனுசாமி வீட்டில் வேலைக்கு நேற்று காலை சேர்ந்த பியுலாவிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு சீனிவாசனும் ,கோபிகாவும் வேலைக்கு சென்று விட்டனர். 

 பின்னர் முனுசாமி 12 மணி அளவில் உறங்கியுள்ளார். 3 மணி அளவில் கண் விழித்து பார்த்த போது குழந்தையையும் , வேலைக்காரி பியூலாவையும் காணவில்லை. இதனால் பதற்றமடைந்த முனுசாமி இது குறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற போலீசார் 4 தனிப்படை அமைத்து பியூலாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பியூலாவின் கணவர் , தம்பி , வேலைக்கு அமர்த்திய முருகன் ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

பின்னர் பியூலாவின் செல்போனை போலீசார் கண்காணித்த போது அவரது செல்போன் டவர் முதலில் நெல்லூர் காண்பித்தது , பின்னர் திண்டிவனத்தை காண்பித்தது , பின்னர் விழுப்புரத்தை காண்பித்தது . 

பின்னர் செங்கல்பட்டை காண்பித்தது. காலையில் கோயம்பேட்டை நோக்கி செல்போன் டவர் காட்டியது. போலீசார் அதை பின்பற்றி தொடர்ந்தபோது கோயம்பேட்டிலிருந்து கீழ்ப்பாக்கத்தை காண்பித்தது. 

இதையடுத்து அடையாளம் காட்ட அவரது கணவர் , முருகன் , தம்பி ஆகியோரை ஜீப்பில் ஏற்றிகொண்டு டவர் காட்டும் இடத்தை நோக்கி சென்ற போது ஓட்டேரி அருகே குழந்தையுடன் சென்று கொண்டிருந்த கணவர் மற்றும் முருகன் அடையாளம் காட்டினர். 

உடனடியாக அவரை பெண்போலீசார் மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர். குழந்தை ஆரோக்கியமாக எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. உடனடியாக பியூலாவை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த தான் குழந்தையை பார்த்தவுடன் கடத்தணும் என்று தோன்றியதால் தூக்கி சென்றதாக கூறினார். நெல்லூரில் பெற்றோர் ஏற்றுகொள்ளாததாலங்கிருந்து பஸ் மூலம் திண்டிவனம் வந்ததாகவும் , அங்கிருந்து பேருந்து மூலம் விழுப்புரம் சென்றதாகவும் போலீசார் தேடுவதை அறிந்து ரயிலில் செங்கல்பட்டு வந்து அங்கிருந்து 119 எண் வண்டியில் ஏறி கோயம்பேடு வந்து அங்கிருந்து கீழப்பாக்கத்தில் உள்ள தாத்தா வீட்டுக்கு செல்லும் போது பிடிபட்டதாகவும் தெரிவித்தார். 

அவரிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டது. 24 மணி நேரத்தில் குழந்தை கடத்தலை முடிவுக்கு கொண்டு வந்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். 

click me!