
அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயிலில் 1932-ல் நடந்த குடமுழுக்கு விழா, 85 வருடங்கள் கழித்து இன்றுதான் நடைபெறுகிறது.
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய இராச ராச சோழனின் மகன் முதலாம் இராசேந்திர சோழன், கங்கை போரின் வெற்றியை கொண்டாடும் வகையில் கட்டிய கோயில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலாகும்.
தனது தந்தை தஞ்சையில் கட்டியதைவிட பெரிய கோயிலை கட்ட எண்ணிய இராசேந்திர சோழன், நளினத்தோடு அமைக்கப்பட்ட விமானம், கிழக்கு நுழைவு வாயில், பெரிய நந்தி, பிரம்மாண்டமான மூலமூர்த்திகள், இருபுறமும் கருங்கல்லான துவார பாலகர்கள், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வானசாஸ்திர முறைப்படி அழகாக செதுக்கப்பட்ட நவக்கிரங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இக்கோயிலை கட்டினார்.
60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இங்குள்ள லிங்கம் தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கமாகும்.
அம்மன் பெரியநாயகி, பெயருக்கு ஏற்றார்போல பெரிய உருவத்தில் காட்சியளிக்கிறார்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் கடந்த 1932-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
தற்போது 85 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி கணபதி ஓமம், நவக்கிரக ஓமம், அட்டலட்சுமி ஓமம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 19-ஆம் தேதி கொடிமரம் நடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இராசேந்திர சோழன் தடம் காணும் பயணக் குழுவினர் மூலம் கங்கை நதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு ஜனவரி 27-இல் யாகசாலை பூசைகள் தொடங்கின.
திங்கள்கிழமை காலை பிரகதீசுவரர் கோயில் கோபுர உச்சியில் இருந்த பழைய கோபுர கலசம் அகற்றப்பட்டு, புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட ஒன்பது அடி உயர கலசம் தானியங்கள் நிரப்பப்பட்டு பொருத்தப்பட்டது.
பிரகன்நாயகி, துர்கையம்மன் கோபுர கலசங்களும் மாற்றி அமைக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமை 4 மற்றும் 5-ஆம் கால யாகசாலை பூசைகளும், புதன்கிழமை 6 மற்றும் 7-ஆம் கால யாகசாலை பூசைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், தொல்லியல்துறை அனுமதியுடன் காஞ்சி அன்னாபிஷேக விழாக் குழுவினர், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் கழகத்தினர் செய்து வருகின்றனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி தலைமையிலான காவலாளர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.