
அரியலூரில் பள்ளி நேரத்தில் மணல் இயங்கக் கூடாது என்று சொல்லியும், கேட்காமல் தொந்தரவு கொடுத்த 50-க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள காரைக்குறிச்சி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி ஒன்று இருக்கிறது.
இந்த இடத்தில் இருந்துதான் அரியலூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றி செல்கின்றன
இங்கு வரும் லாரிகள் அனைத்தும் காரைக்குறிச்சி கிராமத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால், இங்குள்ள சாலைகள் மிகவும் குறுகளாக இருப்பதால், மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் நேரங்களான காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் லாரிகள் இயங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் ரொம்ப நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதுவும் வழக்கம்போலதான் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில், நேற்று காலை பள்ளி நேரத்தில் மணல் லாரியை முந்தி வந்த கார் ஒன்று அப்பகுதியைச் சேர்ந்த சிவானி என்ற குழந்தை மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதனால் கொதித்து எழுந்த கிராம மக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மணல் லாரிகளை இயக்கக் கூடாது என கட்டளையிட்டு, அந்த வழியாக வந்த 50-க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை சிறைபிடித்தனர். பின்னர், அங்கேயே போராட்டமும் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு அலறி அடித்து வந்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அடுத்தமுறை இதேபோன்று நடந்தால் மீண்டும் போராட்டம் செய்வோம் என்று எச்சிரித்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.