
திருச்சியில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக பேசியதாக பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு மீண்டும் பணி வழங்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஊர்க்காவல்படை வீரர் பெளஸனுக்கு 12 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என கோரி சென்னை மெரினாவில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், பெரியோர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு அளித்து பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்றது. கொத்து கொத்தாக பீட்டா அமைப்புக்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் எதிராக பொதுமக்கள் குவிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னை மேரினாவில் போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வந்த காவலர் ஒருவர் போராட்டத்திற்கு ஆதரவாக பேசினார்.
அவரை தொடர்ந்து திருச்சியிலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெல்சன் என்ற ஊர்காவல் படை வீரர் பேசினார். அப்போது, நானும் கிராமத்தைச் சேர்ந்தவன்தான் எனவும் ஜல்லிக்கட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது எனவும் ஜல்லிக்கட்டுக்கு காவல்துறை எதிரி கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
அதனால் போலீசாரை மதித்து நடந்து கொள்ளுங்கள் எனவும் காவலர்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு உதவி செய்து வருவதாகவும் தெளிவுபடுத்தினார்.
ஜல்லிக்கட்டுக்காக போராடும் நீங்கள் விவசாயத்துக்காகவும் போராட வேண்டும் எனவும் மழை பொய்த்துபோனது மரம் வையுங்கள் எனவும் வலியுறுத்தினார்.
இதனால் காவலர் பென்சன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று மீண்டும் அவருக்கு பணி வழங்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.