
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள், தைப் பொங்கல் திருநாளை ஒட்டி நடத்தப் படுவது வழக்கம். குறிப்பாக, மதுரை மாவட்டத்திலும், சுற்றியுள்ள தென் மாவட்டங்களிலும் இதை வீர விளையாட்டு என்ற வகையில் பரவலாக பொங்கல் அன்று ஆண்டாண்டு காலமாக நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக நீதிமன்றம், அரசு ஆகியவற்றுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டது. கடந்த வருடம் இதற்காக பெரிய போராட்டமே நடத்தப் பட்டது.
இந்நிலையில், இந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தடை இல்லாத நிலையில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மதுரை ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், எஸ்.பி. ஆகியோருடன் பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் போது, அலங்காநல்லுரில் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்,
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து, அவனியாபுரத்தில், ஜனவரி 14ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதியும்,
புகழ்பெற்ற அலங்காநல்லூரில் - ஜனவரி 16 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் மதுரை ஆட்சியர் வீரராகவராவ் இதனை அறிவித்தார்.