
விழுப்புரம்
விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கேலி செய்ததால் பிளஸ்–1 மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஐயந்தோப்பு எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பிரியா (17). இவர் முருங்கப்பாக்கத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பிரியா, விட்டிலாபுரத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வருவதற்காக திண்டிவனம் காந்திசிலை அருகே நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவில் ஏறினார்.
அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களான காளி (30), குருசாமி (28) ஆகியோர் சேர்ந்து பிரியாவை கேலி செய்தனராம்.
இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் மனமுடைந்த பிரியா, அதே பகுதியில் உள்ள தனது மாமா வீட்டு மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரோஷணை காவலாளர்கள் வழக்குப்பதிந்து பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக காளி, குருசாமி ஆகிய இருவரை கைது செய்தனர்.
கேலி செய்ததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.