
வேலூர்
இரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என்று தெற்கு இரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது.
நேற்று தெற்கு இரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "சென்னை புறநகர் உள்ளிட்ட இரயில்களில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
எனவே, அவர்களின் முகங்களை விடியோ எடுத்து அதை பயண அட்டை புகைப் படத்துடன் ஒப்பிட்டு இரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இனி வரும் காலங்களில் இரயில் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் அவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும்.
காஞ்சிபுரம், திருவள்ளூரைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.