
திருவண்ணாமலை அருகே விவசாயி திருமலையின் மரணத்துக்கு காரணமான வன ஊழியர்மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்புழுதிப்பூரில் வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த திருமலை என்பவர் மர்மமாக இறந்து கிடந்தார்.
வனத்துறையினரால் திருமலை அடித்துக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தாக்கியதில் வனத்துறை அதிகாரி தாண்டவராயன் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து வனத்துறையினருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர்.
அவர்களிடம் இருந்து போலீசார் தாண்டவராயனை மீட்டு அழைத்து சென்றனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் விவசாயி திருமலையின் மரணத்துக்கு காரணமான வன ஊழியர்மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவியதால் ஏராளமான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து கிராம மக்கள் போலீசாரின் வாகனங்கள் மீது கல் வீசியதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.