பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்னையில் உள்ள என்ஐஏ கட்டுப்பாட்டு மையத்திற்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம நபர் மிரட்டல்
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு பல மடங்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் என்ஐஏ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த மர்ம போனால் போலீசார் அதிர்சி அடைந்துள்ளனர். சென்னை புரசைவாக்கத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர் இந்தியில் பேசி பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தனது இணைப்பை துண்டித்துள்ளார்.
என்ஐஏவிற்கு வந்த மர்ம போன்
தேசிய புலனாய்வு முகமையானது, தீவிரவாதிகள், குண்டு வெடிப்பு உள்ளிட்ட சதி செயல்களில் ஈடுபடும் தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக காவல் கட்டுப்பாட்டு எண்களை கொடுத்திருந்தனர். அந்த எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் மோடிக்கு இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ள சம்பவம் தான் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபரின் மிரட்டல் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர். இது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்து அழைப்பு எந்த பகுதியில் இருந்து வந்துள்ளது எந்த சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என கண்டறியும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை போலீஸ் விசாரணை
இது போன்ற மிரட்டல்கள் பொதுவாக சென்னை காவல் கட்டுப்பட்டுரைக்கு தான் வரும் பிறகு விசாரணைக்கு பிறகு அந்த மிரட்டல்கள் புரளி என தெரியவரும் அதன் பிறகு அவர் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் முதல் முறையாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.