எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி விட்டதாக சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதற்கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி நடப்பாண்டில் மட்டும் 5 முறைக்கு மேல் வந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே, திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோவையில் நடந்த பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்றார்.
அதன் தொடர்ச்சியாக, சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். பாரத அன்னை வாழ்க; எனது அருமை தமிழ் சகோதர சகோதரிகளே என தமிழில் கூறி பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கினார்.
கோட்டை மாரியம்மனை வணங்கி தனது பேச்சை துவக்குவதாக தெரிவித்த பிரதமர் மோடி, கோவையில் மக்கள் வெள்ளத்தில் சென்றேன். தமிழகத்தில் எனக்கு கிடைத்து இருக்கும் ஆதரவு குறித்துதான் நாடே பேசிக் கொண்டு இருக்கிறது என்றார்.
ஆடிட்டர் ரமேஷ் உள்பட பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது என நா தழுதழுக்க மேடையைல் பேசிய பிரதமர் மோடி, கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை கொலை செய்து விட்டார்கள் என்றார். மேலும், ஆடிட்டர் ரமேஷூக்கு அஞ்சலி செலுத்துமாறு கூட்டத்தினரை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோலை எதிர்க்கட்சியினர் தவறாக பேசுகின்றனர். கேதர்நாத்தைப் போல தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம். இந்தியா கூட்டணி கட்சிகள் இந்து மதத்திற்கு எதிராக பேசுகின்றனர். அவர்கள் அழிந்து போவார்கள். எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி விட்டது.” என்றார்.
நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைந்துள்ளது. பாமக நம்முடன் இணைந்துள்ளது. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அனுபவம், திறமை கூட்டணிக்கு உதவும் என பிரதமர் மோடி கூறினார்.
மேடையில் பாமக நிறுவனார் ராமதாசுடன் பிரதமர் மோடி காட்டிய நெருக்கம்!
தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கமே தொலைந்துவிட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, “தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் பேச்சாக இருக்கிறது. 400 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். பத்தாண்டுகளில் செய்த சாதனையால் பாஜக இந்த வெற்றியைப் பெறும்.” என ஆருடம் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியா; வளர்ச்சியடைந்த தமிழகத்தை பெற இந்த முறை 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற வேண்டும் எனவும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.
பிரதமர் மோடி கலந்து கொண்ட சேலம் பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில் முதல் முறையாக பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் பாஜக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சரத்குமார், ஜி.கே.வாசன், ஏசி சண்முகம், அன்புமணி ராமதாஸ், ஜான் பாண்டியன், பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள்; அந்த ஏக்கத்தை தனிக்கத்தான் பாமக இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது என்றார். அதன்பிறகு, அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுவார் என பாஜகவின் கே.பி. ராமலிங்கம் அழைப்பு விடுத்தார். அப்போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், பத்தாண்டு காலமாக பிரதமர் மோடியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். ஒரே கையெழுத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசாணை பிறப்பித்தவர் பிரதமர் மோடி என்று கூறினார்.