
தேனி
அரசியல் கட்சி தொடங்க, இரண்டே தகுதி தான். ஒன்று, பைத்தியமாக இருக்கக்கூடாது, இன்னொன்று 18 வயதுடையவராக இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு கொள்கை அடிப்படையில்ல் வரவேற்பதா? எதிர்ப்பதா? என்று முடிவு செய்யப்படும் என்றும் கி.வீரமணி கூறினார்.
திராவிடர் கழகம் சார்பில், கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
இந்த முகாமிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். அதனைத் தொடங்கியும் வைத்தார்.
அப்போது அவர் செய்தியாள்ர்களுக்கு அளித்த பேட்டி:
“திராவிடர் கழகம் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. திராவிடர் கழகம் ஒரு இயக்கமாக இருந்து குடிமக்களுக்கு அறிவியல் மனப்பான்மையையும், கேள்வி கேட்கும் சிந்தனையையும் உருவாக்கி வருகிறது. சீர்திருத்த ஒற்றுமை, மனிதநேயத்தை சொல்லி கொடுத்து வருகிறது.
இந்த பயிற்சியில் வன்முறை நிகழ்ச்சியோ அல்லது மற்றவர்களை தூண்டிவிடும் நிகழ்ச்சியோ கிடையாது. இது முழுக்க, முழுக்க அறிவியல் சார்ந்த பயிற்சிதான். இளைஞர்கள் விஞ்ஞானத்தை பாடமாக படித்தால் மட்டும் போதாது. அறிவியலை வாழ்வியலாக பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சியில் கற்று கொடுக்கப்படுகிறது.
அரசியல் பற்றி ரஜினிகாந்த் என்ன புரிந்து வைத்திருக்கிறார் என்பது தெரியாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நமது நாட்டில் கட்சி தொடங்குவது தான் ரெம்ப சுலபமானது. ஏனெனில், ஒரு கம்பெனி தொடங்குவதென்றால் கூட 7 பேர் வேண்டும். ஆனால், கட்சி தொடங்குவதற்கு ஒருவர் கூட போதும். அதனால் யார் எப்போது வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். வரலாம்.
ரஜினிகாந்தின் அரசியல் கொள்கை, திட்டம் என்ன என்பதன் அடிப்படையிலேயே வரவேற்பதா? எதிர்ப்பதா? என்று முடிவு செய்வோம்.
நாம் சொல்லி யாரும் வரவேண்டிய அவசியமும் இல்லை. யாரும் தடுக்கவேண்டிய அவசியமும் இல்லை.
அரசியல் கட்சி தொடங்க, இரண்டே தகுதி தான். ஒன்று, பைத்தியமாக இருக்கக்கூடாது, இன்னொன்று 18 வயதுடையவராக இருந்தால் போதும்.
தமிழகத்தில் ஒரு பொம்மலாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் கயிறு வைத்து இழுத்து கொண்டிருக்கிறார்கள். அந்த பொம்மலாட்டத்துக்கு எப்பொழுது எதை இழுக்க வேண்டும், எதை விடவேண்டும் என்பது நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அதை சந்திப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.