
தேனி
தமிழை எதிர்த்து எதையாவது செய்யனும் என்று நினைப்பவர்கள் தமிழ்நாட்டில் வாழக் கூடாது என்று பொன்.ராதாகிருஷ்ணனை போட்டுத் தாக்கினார் கனிமொழி எம்.பி.
தேனி மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தித் திணிப்பை எதிர்த்தும், ‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், கம்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கு நடைப்பெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு தேனி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“தமிழகத்தில் இருப்பவர்கள் யாரும் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. கட்டாயப்படுத்தி திணிக்கும்போது தான் எதிர்க்கிறோம்.
இந்தி தேசியமொழி அல்ல. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போல் அதுவும் 22 ஆட்சி மொழிகளில் ஒன்று.
கூடாரத்தில் ஒட்டகம் தலையை நுழைத்த கதைபோல், மத்திய அரசு கட்டாய இந்தி திணிப்பு செய்து கொண்டிருக்கிறது.
இந்தியை எதிர்ப்பவர் தேச துரோகி என்றால், அதை பெருமையாக நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்தியை கொண்டு வருவதன் மூலம் நமது அடையாளம் அழிக்கப்படுகிறது. இந்தி திணிப்பிற்கு இப்போதே முட்டுக்கட்டை போடவேண்டும்.
தாய்மொழிக்காக உயிரை கொடுப்பவர்கள் தமிழர்கள். மத்திய அரசு இதை உணரவேண்டும். நாம், நமது மொழி என்ற உணர்வு நமக்கு அவசியம். நாம் எதையெல்லாம் எதிர்க்கிறோமோ? அதையெல்லாம் மத்திய அரசு ஒவ்வொன்றாக திணிக்க பார்க்கிறார்கள்.
மருத்துவக்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகவே ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்படுகிறது என தவறான வாதம் வைக்கப்படுகிறது. இதுவரைக்கும் தமிழகத்தில் இருந்து மருத்துவர்களாக படித்து பணியாற்றுபவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. எல்லோரையும் விட சிறப்பாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் ‘நீட்’ தேர்வு தரத்தை உயர்த்துவதற்காக கொண்டு வரப்படவில்லை.
இத்தனை ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் போராடி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ‘நீட்’ தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. ‘நீட்’ தேர்வு நிச்சயம் தரத்தை உயர்த்துவதில்லை. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
தமிழை வைத்து யாரும் பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் தான் எல்லோரையும் வாழ வைத்து கொண்டிருக்கிறது. அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழை எதிர்த்து எதையாவது செய்யனும் என்று நினைக்கிறவர்கள் தமிழ் நாட்டில் வாழக்கூடாது.
காலங்கள் மாறிக்கொண்டிருக்கும் வேளையில் எல்லா விஷயங்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. அறிவியல், கணிதம் மாறுகிறது. சரித்திர பாடங்கள் கூட மாறி கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் நிச்சயமாக கல்வியிலும் சீர்த்திருத்தம் மிகவும் அவசியம்.
இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் ஆனது இல்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ. என்.ராம கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா, முன்னாள் போடி எம்.எல்.ஏ. லட்சுமணன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.