மின் இணைப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஓ.பி.எஸ்-சின் மனைவி பதில் அளிக்கணும் – நீதிமன்றம் உத்தரவு…

First Published Aug 2, 2017, 8:31 AM IST
Highlights
The ops wife should answer for case of requesting to cancel the e-link


மதுரை

இலட்சுமிபுரம் கிணறு விவகாரத்தில் நிலத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் இலட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஏ.ரங்கசாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில். “தேனி மாவட்டம் அருகே உள்ள இலட்சுமிபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலம் ஒன்றுள்ளது.

இங்கு கிணறு தோண்டி அதிக குதிரைத் திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு வணிக நோக்கில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த நிலத்திற்கு விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்வாரிய விதிகளின்படி ஆற்றின் கரையோரம் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள விளை நிலங்களுக்குதான் விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலம் ஆற்றின் கரையில் இருந்து 15 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இருப்பினும் அதற்கு விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆட்சியர் தரப்பில், “கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரை வாகனங்களில் எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. 

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், “நிலத்தின் உரிமையாளரான விஜயலட்சுமி இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!