பல்லடத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டதற்காக 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என இரண்டு நாட்கள் நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பல்லடம் கொடூர கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார், இவர் பொங்களூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராட்சியின் பாஜக கிளைத்தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனக்கு சொந்தமான நிலத்தில் வெங்கடேஷ் என்பவர் தனது கூட்டாளிகளோடு மது அருந்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று அரிவாள் எடுத்து வந்து செந்திலை வெட்டியுள்ளார். இவரது சத்தம் கேட்டு வந்த செந்திலின் சித்தி புஷ்பவதி (68), தம்பி மோகன்ராஜ் (45) மற்றும் சித்தி ரத்தினாம்மாள் (58), ஆகியோரையும் அந்தக் கும்பல் மது போதையில் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தனர்.
உறவினர்கள் போராட்டம்
இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியது. மேலும் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்து இறந்தவர்களின் உறவினர்கள், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் இரண்டாவது நாளாக் போராட்டம் தொடர்ந்தது.
இதனைடுத்து இறந்தவர்களின் உறவினர்களோடு காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
பல்லடம் போராட்டம் வாபஸ்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கொலைசெய்யப்படவர்களின் உறவினர் சிவக்குமார், கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாகவும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனையேற்று உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதித்தாக கூறினர்.
இதையும் படியுங்கள்