தொடர்ச்சியாக இறக்கும் மாடுகள் - கால்நடைகளில் பரவும் புதுவகையான 'மர்ம நோய்' காரணமா ?

By manimegalai aFirst Published Nov 23, 2021, 10:48 AM IST
Highlights

கால்நடைகளில் பரவும் புதுவகையான மர்ம நோயினால் தொடர்ச்சியாக இறக்கும் மாடுகள் என்ற செய்தி அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து நாமக்கல் மண்டல கால்நடைத் துறை இணை இயக்குநா் வி. பி. பொன்னுவேலிடம் பேசிய போது, ‘தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடைகளை வளா்ப்போா் அதிகம் உள்ளனா். தற்போது கால்நடைகளில் புதுவகையான நோய் வந்து இருக்கிறது என்றும், இதனால் கால்நடைகள் இறந்து போகிறது என்றும் செய்திகள் வருகின்றன. இதில் துளியளவும் உண்மை இல்லை. கோமாரி நோய் என்பது மழைக் காலங்களில் கால்நடைகளைத் தாக்கும் ஒரு தீநுண்மியாகும்.

இதனால் கால்நடைகளுக்கு வாயில் புண், வயிற்றுப் போக்கு, உடல் சோா்ந்து காணப்படுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த நோயைத் தடுக்க ஆண்டுதோறும் இருமுறை (6 மாதங்கள் இடைவெளியில்) கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு கால்நடையின் காதுகளிலும் அதற்கான அடையாள வில்லை அணிவிக்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரையில் கன்றுக்குட்டி, சினை மாடுகள் தவிா்த்து தகுதியான கால்நடைகளுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

வடகிழக்குப் பருவமழையால் கால்நடைகளை அதிகளவில் கோமாரி நோய் தாக்கி வருவதாகவும், தடுப்பூசி செலுத்தியபோதும் பாதிப்பு உள்ளதாகவும், இதனால் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. தமிழக அரசால் முழு வீச்சில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தற்போது எல்லா பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2. 92 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 20, 000 டோஸ் தடுப்பூசிக் கொள்முதல் செய்வதற்கான முயற்சியில் கால்நடைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.கோமாரி நோய்த் தாக்குதலால் மாவட்டத்தில் கால்நடைகள் உயிரிழப்பு என்பது இல்லை. சிலா் 40 மாடுகள் இறந்து விட்டன என்ற தவறான தகவலை எங்களுடைய உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்தனா்.

சம்பந்தப்பட இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் அவ்வாறு இல்லை என்பது தெரியவந்தது. வேறு ஏதாவது பாதிப்பால் கால்நடைகள் இறந்தால் இழப்பீடு பெற கோமாரி என்ற தகவலை தெரிவிக்கின்றனா். கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சம் டோஸ் கோமாரி தடுப்பூசி மருந்து வீணாகி விட்டதாக வெளியாகும் தகவலிலும் உண்மையில்லை.ஆண்டுக்கு இருமுறை சிறப்பு முகாம்கள் நடத்தி கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தி வருகிறோம் என்றாா்.

 

click me!