உயிரியல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போராட்டம் நடத்திய மாணவர்கள். ஈரோடு பெருந்துறை அருகே இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உயிரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் திருமலை மூர்த்தி. இவர் தன்னிடம் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சைல்டு ஹெல்ப் லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் ஆசிரியர் திருமலை மூர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.
undefined
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை, பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் தலைமையாசிரியர் அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி அசட்டையாக இருந்ததாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக பெருந்துறையில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் திடீரென மாணவ மாணவிகள் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் அவ்வழியே வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். காவல் துறையை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் போராட்டதில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். காலை 8. 00 மணி முதல் மாலை 3. 00 மணி வரை தொடர் போராட்டம் நடைபெற்ற சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் கணேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவரம் மாணவ-மாணவிகள் மற்றும் அவருடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதனால்அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.