“அரசு வேலை வாங்கி தரவில்லை, அதனால் தான் கடத்தினோம்” : மோசடி செய்த அரசு ஊழியர் - ‘சேலம்’ அருகே பரபரப்பு !

By manimegalai aFirst Published Nov 23, 2021, 9:43 AM IST
Highlights


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த அரசு ஊழியரை கடத்தியவர்களை கைது செய்த காவல் துறையினர். சேலம் அருகே பரபரப்பு சம்பவம்.

சேலம் சீலநாயக்கன்பட்டி வேலு நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய தம்பி ஆனந்தன். இவர்களுடைய நண்பர் கிருஷ்ணகுமார். இந்நிலையில்  லட்சுமணனுக்கும், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சண்முகராஜேஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சண்முகராஜேஸ்வரன் ‘கரூர்’ மாவட்ட சர்வேத்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன், ஆனந்தன், கிருஷ்ணகுமார் உள்பட சிலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 18 லட்சம் வரை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு சண்முகராஜேஸ்வரன் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் வாங்கிய பணமும் திரும்ப கொடுக்கவில்லை.

இதனால் சண்முகராஜேஸ்வரனிடம் இருந்து பணம் திரும்ப பெற லட்சுமணன், ஆனந்தன், கிருஷ்ணகுமார் மற்றும் அவர்களுடைய நண்பரான பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாதன் ஆகியோர் திட்டமிட்டனர். இதையடுத்து அவர்கள் சண்முகராஜேஸ்வரனுக்கு போன் செய்து, நண்பர் ஒருவருக்கு அரசு வேலைவாங்கி கொடுக்க வேண்டும் என்றும், இதற்காக அவர் ரூ. 5½ லட்சம் வைத்துள்ளார் என்றும் தெரிவித்தனர். அந்த பணத்தை சேலம் வந்து பெற்று கொள்ளுமாறும் தெரிவித்தனர்.

இதனை நம்பி நேற்று முன்தினம்  காரில் சேலம், சீலநாயக்கன்பட்டிக்கு வந்தார் சண்முகராஜேஸ்வரன். அப்போது அவரை லட்சுமணன் உள்பட 4 பேரும் சேர்ந்து காரில் கடத்தி,  தாதகாப்பட்டி புதுத்தெருவில் உள்ள ஆனந்தன் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதுடன், அவரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று காலை சண்முகராஜேஸ்வரன் அங்கிருந்து தப்பி வந்து, சேலம்  அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதையடுத்து சண்முகராஜேஸ்வரனை கடத்தி தாக்கியதாக லட்சுமணன், ஆனந்தன், கிருஷ்ணகுமார், மஞ்சுநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ‘அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சுமணன் உள்பட பலரிடம் சண்முகராஜேஸ்வரன் பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக சேலம் டவுன், அம்மாபேட்டை, அன்னதானப்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அவர் மீது ஏராளமானவர்கள் மோசடி புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அவரை கடத்தி சென்று தாக்கி பணம் கேட்டு லட்சுமணன் உள்பட 4 பேரும் மிரட்டியது தெரியவந்தது. மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே முறைகேடு புகார் தொடர்பாக சண்முகராஜேஸ்வரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். மோசடி புகார் தொடர்பாக சண்முகராஜேஸ்வரனிடம் அம்மாபேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

click me!