
சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வருமான வரித்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையை சேர்ந்த மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் 140 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையினரிடம் சிக்கியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளும் இருந்தன.
இது குறித்து சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சேகர் ரெட்டி சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமலாக்க பிரிவினர் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதனிடையே சேகர் ரெட்டி மணல் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டதற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வருமான வரித்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் பெயர் பட்டியலை வருமான வரித்துறை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
மேலும், லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை அனுப்பியுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடக்கலாம் என தமிழக அரசுக்கு வருமான வரித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், 300 கோடி ரூபாய் லஞ்சம் தந்தாக சேகர் ரெட்டி தனது டைரியில் குறிப்பிட்டுள்ளதாகவும், பான்மசாலா தொழிலதிபர்களிடமும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகத்தை முறைகேடாக பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும், அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே லஞ்சம் பெற்றவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்கனவே பல தலைவலிகளில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மீண்டும் ஒரு புதிய தலைவலி உருவாகியுள்ளது.