
கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்த தாய் மற்றும் 2 மகள்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று தீக்குளித்தனர்.
கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.
70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார்.
இந்நிலையில், தீக்குளித்து இறந்த தாய் மற்றும் 2 மகள்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.