
முல்லைபெரியாறு அணையில் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணை தமிழக மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரம் கொடுக்கும் அணையாக உள்ளது. இந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்தது. அப்போது அணையை கண்காணித்து அணை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மூவர் குழுவை அமைத்தது.
பின்னர் மூவர் குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுநரைகளையும் சேர்க்க வேண்டும் என்ற கேரள அரசின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆண்டு மேலும் இருவர் சேர்க்கப்பட்ட நிலையில் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவாக மாற்றப்பட்டது. இந்தக் கண்காணிப்பு குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்சரண் தலைமையிலான கண்காணிப்பு குழுவில் தமிழகப் பிரதிநிதிகளாக தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக குழு நேரில் ஆய்வு
இந்தநிலையில் முல்லைபெரியாறு அணை பலமாக இல்லையென்றும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கேரள பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கேரள அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சர்வதேச வல்லுநர்களை கொண்ட குழு அமைத்து முல்லைபெரியாறு அணை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,
கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் தமிழக பிரதிநிதிகள் இன்று காலை தேக்கடியில் இருந்து வாகனம் மூலமாக வலக்கடவு வனப்பாதை வழியாக முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றனர். கேரளா அரசின் பிரதிநிதிகள் தேக்கடியில் இருந்து படகு மூலமாக முல்லைப் பெரியாறு அணைக்கு சென்றனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அணையின் நீர்வரத்து,நீர் இருப்பு, மற்றும் கசிவு நீர் மதகுகளின் இயக்கம், அணையில் செய்ய வேண்டிய மராமத்து பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
நீர் மட்டத்தை உயர்த்த திட்டம்.?
முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து செய்வதற்கும், கட்டுமான பணிகள் செய்வதற்கும் கேரளா அரசு தடையாக உள்ளது,பேபி அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும். கட்டுமான தளவாடப் பொருட்களை அணைப்பகுதிக்கு வல்லக்கடவு வழியாக தடையின்றி கொண்டு செல்ல உதவ வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.பேபி அணையை பலப்படுத்தும் கட்டுமான பணிகளை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழகம் சார்பாக வைக்கப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்