
முதுகுளத்தூர்,
காஷ்மீர் பனிச்சரிவில் உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் சொன்னார். அப்போது, இராணுவ வீரரின் மனைவி, தனக்கு அரசு வேலை வேண்டும் என்று மனு அளித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த திருக்கண்ணன் என்பவருடைய மகன் திருப்பாண்டி (33).
இவர் காஷ்மீர் மாநிலம் சம்பா என்னும் பகுதியில் பணியில் இருந்தபோது கடந்த பிப்ரவரி 5–ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் மணிகண்டன் புனவாசல் கிராமத்திற்குச் சென்று இராணுவ வீரரின் தந்தை திருக்கண்ணன் மற்றும் திருப்பாண்டியின் மனைவி கனகவள்ளி ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது இராணுவ வீரரின் மனைவி கனகவள்ளி அமைச்சர் மணிகண்டனிடம் அரசு வேலை வழங்குமாறு கேட்டு மனு அளித்தார். அதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அமைச்சருடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் சுந்தரபாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பத்மநாதன், ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாடசாமி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சங்கரபாண்டியன், பாண்டி, வெங்கலக்குறிச்சி செந்தில், புளியங்குடி முத்துராமலிங்கம் உள்பட பலர் சென்றனர்.