தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் ‘ரெட்’ அலெர்ட்டை வாபஸ் வாங்கியிருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் பெய்த பெருமழையால் மாநகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கியது. சென்னையில் நேற்று அதிகாலை பொழுது மழைபொழிவுடன் தொடங்காமல் வெயிலுடன் விடிந்தது. நேரம் செல்ல, செல்ல கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்தது. பின்னர் சிறிது நேரத்தில் வானம் தெளிவாகி மழை நின்று வெயில் தலைக்காட்டியது.
undefined
எழும்பூர்,புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் வெயில் சுளீரென்று அடித்த போது அடையார், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை போன்ற இடங்களில் கனமழை பெய்தது. பின்னர் அந்த பகுதிகளில் வெயில் அடித்தபோது இந்த இடங்களில் மழை பெய்தது. இயற்கையை கணிக்க முடியாது என்பதை பறை சாற்றும் வகையில் வானிலை நிலவியது. தாம்பரம், முடிச்சூர், திருநின்றவூர் போன்ற புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குமரி, தூத்துக்குடி, நெல்லை போன்ற தென்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வளி மண்டல சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் 12 கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுத்துறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய மிதமான மழையும் நேற்று பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஆனால் எதிர்பார்த்தப்படி மழை பெய்யவில்லை. இதனால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி,திருநெல்வேலி,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,சென்னை,தஞ்சாவூர்,விழுப்புரம்,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘ரெட்’ அலெர்ட் வாபஸ் வாங்கினாலும் தமிழகத்தில் கனமழை பெய்யும், எனவே எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.