தமிழகத்தில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இதனிடையே தமிழகத்தில் டிசம்பர் 3-ந்தேதி வரையில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என்றும், இது நாளை மறுதினமான வியாழன் அன்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென்கிழக்கு, மத்திய வங்ககடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும். எனவே இன்று முதல் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்’ என்றும் அறிவித்து இருக்கிறது.