பேராசிரியை தனது காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ கல்லூரி மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி...

First Published Jan 20, 2018, 8:07 AM IST
Highlights
The medical college student stabbed the neck and tried to commit suicide because he refused to love his professor ...


கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் உதவி பேராசிரியை தனது காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ கல்லூரி மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார். காவலாளர்கள் மீட்டு மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், காரிபாளையம் அருகே உள்ள கீழ்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் மகன் நவீன்குமார் (22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

இவர் அந்த கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியை ஒருவரிடம் நன்றாக பேசுவார். அவரும் மாணவர் என்ற முறையில் நவீன்குமாரிடம் நன்றாக பேசுவது வழக்கம். அந்த உதவி பேராசிரியைக்கு தன்னைவிட ஐந்து வயது அதிகமாக இருந்தாலும், அவருடைய பேச்சு மற்றும் அவர் காட்டிய பாசத்தில் நவீன்குமார் கவரப்பட்டார்.

சில மாதங்களாக நவீன்குமார் அந்த உதவி பேராசிரியையை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலையில் நவீன்குமார் கோயம்புத்தூரில் உள்ள அந்த உதவி பேராசிரியை வீட்டிற்குச் சென்றார். மாணவர் என்ற முறையில் அவரை வீட்டிற்குள் அழைத்துச்சென்ற உதவி பேராசிரியை எப்போதும் போலவே நன்றாக பேசி உள்ளார்.

அப்போது, நவீன்குமார், "நான் உங்களை காதலிக்கிறேன் என்றும், உங்களைதான் திருமணம் செய்து கொள்வேன்" என்றும் அவரிடம் கூறியுள்ளாராம்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உதவி பேராசிரியை, ‘எனக்கு உன்மீது அதுபோன்ற எண்ணம் வரவே இல்லை. நான் சகோதர பாசத்துடன்தான் உன்னுடன் பழகினேன், என்னை தவறாக நினைக்க வேண்டாம். நீ என்னை காதலித்து வந்தால் அதை மறந்துவிட்டு, ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்து’ என்று நவீன்குமாருக்கு அறிவுரை கூறி, அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த நவீன்குமார் கோயம்புத்தூர் காவல் பயிற்சி பள்ளி மைதானம் அருகே வந்தபோது, தன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ரத்தம் வழிந்தோட அவர் கீழே சாய்ந்ததை பார்த்த அங்கிருந்த காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு, உடனே கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவர் நவீன்குமார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதுபோன்று ஒருமுறை தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்தும் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

click me!