
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற குறைதீர் கூட்டத்தில், பயிர்கள் மற்றும் வீடுகளை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் சு.பழனிச்சாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி உள்பட பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டம் ஆரம்பித்ததும் சில விவசாயிகள் எழுந்து குறைகள் குறித்து நாங்கள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய பதிலும் அளிப்பதில்லை என்று குற்றம் சாட்டினர்.
அதற்கு அதிகாரிகள், "இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும்" என்று மெத்தனமாக தெரிவித்தனர்.
இதனால் கடுப்பான விவசாயிகள் திடீரென மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள், "காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தற்போது இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்து வீடுகளை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கொண்ட முத்தரப்பு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த முத்தரப்பு கூட்டம் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, வனவிலங்குகள் வீடுகள், பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்" என்று அழுத்தமாகத் தெரிவித்தனர்.
அந்த தருணத்தில் சில விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், இதுகுறித்து ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.