
ரேசன் அட்டையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் என்று அச்சிடுவதற்கு பதிலாக வறுமைக் கோட்டிற்கு மேல் என்று தவறுதலாக அச்சிட்டதால் அதனை மாற்றித் தரக்கோரி குடும்ப அட்டையுடன் வந்து ஆட்சியரிடம், மக்கள் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கணேஷ் தலைமை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
புதுநிலவயல் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளுடன் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பின்னர், அவர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “திருமயம் தாலுகா புதுநிலவயல் ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 160 குடும்ப அட்டைகளில் ‘வறுமை கோட்டிற்கு கீழ்’ என்பதற்கு பதிலாக ‘வறுமை கோட்டிற்கு மேல்’ என தவறுதலாக பதிவாகி உள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி, குடும்ப அட்டைகளில் ‘வறுமை கோட்டிற்கு கீழ்’ என மாற்றி கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுநிலவயல் ஊராட்சி முன்னாள் தலைவர் நீலாவதியும் மனு அளித்தார்.
அதேபோன்று, மணமேல்குடி தாலுகா குமரப்பன்வயல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கண்ணன் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், “குமரப்பன்வயல் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேர் வசித்து வருகிறன்றனர். எங்கள் கிராமத்தில் ரேசன் கடை இல்லை. இதனால், சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேசன் கடைக்கு சென்றுதான் பொருட்களை வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையான அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் எங்கள் பகுதியில் பொது கழிப்பறை இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், இந்த மனுவின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.