
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத 13 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை எழும்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜீவ்ராய், உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.
ஆனால் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனகூறி ஈரோட்டை சேர்ந்த இயற்கை வள முன்னேற்றம் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதுகுறித்த வழக்கை நீதிபதி குலுவாடி ரமேஷ், டீக்கா ராமன் அமர்வு விசாரித்தது. அப்போது, இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்ட ஆட்சியர்கள் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.