
திருநங்கை தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவ படிப்பில் இடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் திருநங்கை தாரிகா பானு. திருநங்கை நல ஆர்வலரான கிரேஸ் பானு, தாரிகாவை மகளாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
பல போராட்டங்களுக்கு பிறகு அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பில் சேர தாரிகாபானுவுக்கு மருத்துவ துறையில் இடம் கிடைக்க வில்லை.
சித்த மருத்துவமாவது படிக்கலாம் என சென்னையில் உள்ள இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்வி இயக்கத்தில் சித்த மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றார்.
விண்ணப்பத்தில் பெயர் வயது விபரங்களை பூர்த்தி செய்த பின்னர், பாலின அடையாளத்தை குறிப்பிடும் இடத்தில் ஆண் - பெண் என்ற இரு தேர்வுகள் மட்டுமே இருந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய உத்தரவின் படி மூன்றாம் பாலினத்திற்கான எவ்வித விருப்பத் தேர்வும் அந்த படிவத்தில் காணப்படவில்லை.
இந்நிலையில், தனக்கு சித்த மருத்துவ படிப்பில் சேர சீட் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் தாரிகா பானு.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், சித்த மருத்துவ படிப்பில் தாரிகா பானுவுக்கு இடமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு என ஒரு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.