4 பள்ளி மாணவிகள் தற்கொலை விவகாரம் - 2 ஆசிரியைகள் அதிரடி பணி நீக்கம்...!

First Published Nov 27, 2017, 4:10 PM IST
Highlights
Two teachers have been sacked after 4 school girls have committed suicide near Arakkonam.


அரக்கோணம் அருகே 4 பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து  ஆசிரியைகள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி. இவர்கள் 4 பேரும் பணப்பாக்கத்தில் உள்ள ராமாபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்புப்படித்து வந்தனர். 

சில நாட்களுக்கு முன்பு காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் மாணவியர் நான்கு பேரும் பள்ளியில் இருந்து திடீரென மாயமாயினர். இவர்களில் மூன்று பேரது பைகள் மட்டும் பள்ளி வகுப்பறையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயக் கிணற்றின் அருகே இரண்டு சைக்கிள்களும், ஒரு பையும் இருப்பதைப் பார்த்து போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். 

இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாயக்கிணற்றுக்குள் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இதில் தீபா, சங்கரி உள்ளிட்ட 4 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.  இதையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் தலைமை ஆசிரியை திட்டியதால் தான் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. 

இதைதொடர்ந்து பனப்பாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் வகுப்பு ஆசிரியை ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

ஆனால் மாணவிகளுக்கு சப்போர்ட் செய்த சம்பந்தம் இல்லாத ஒரு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் எனவும் உரியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி அப்பகுதி மக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பாக லில்லி, சிவகுமாரி என்ற 2 ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

click me!