
சென்னை புளியந்தோப்பில் திறந்து கிடக்கும் கால்வாயில் விழுந்த குழந்தையை அப்பகுதி மக்கள் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றினர்.
சென்னை புளியந்தோப்பு 6 வது குறுக்கு சந்துவில் அடைப்பு காரணமாக கால்வாயில் இருந்து கழிவு நீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. மேலும் கழிவு நீர் குழாய் மூடியும் திறந்தவாறே இருப்பதால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது.
இப்பகுதியில் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வாரம் ரூ. 50 வாங்க தவறுவதில்லை எனவும் ஆனால் அவர்களுக்கான பணியை முறையாக அவர்கள் செய்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இந்த நிலை மழைகாலத்தில் மட்டுமல்லாமல் சாதாரண நாட்களிலும் தொடர்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த திறந்து கிடக்கும் கால்வாயில் இன்று காலை குழந்தை ஒன்று திடீரென உள்ளே விழுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தையை காப்பாற்றினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.