
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கானூரில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது:
"சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களிடமும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக "பசுமைப் போராளி" என்னும் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
இந்த அமைப்பின் மூலம் வரும் மார்ச் மாதம் வரை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களிடம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கழிப்பறை பயன்படுத்த தவறுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கப்படும்.
இதனையடுத்து, மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதற்குரிய முன்னேற்பாடு பணிகள் காரைக்குடி நகராட்சியில் சோதனை முறையில் நடைபெற்று வருகிறது.
அந்தப் பணி நிறைவடைந்தவுடன் கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களைப் போன்று பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சிவகங்கை மாவட்டத்திலும் சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கு விரைவில் பயன்படுத்தப்படும்.
சிவகங்கை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.