
வடகிழக்கு பருவமழை இன்னும் தொடர்வதாலும், வங்கக்கடலில் தென் அந்தமான பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியிருப்பதாலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வங்கக் கடலின் தெற்குப் அந்தமான் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி உள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 9ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை, புதுச்சேரி தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று மழை பெய்தது. இன்று அதிகாலையிலும் அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து வடகிழக்கு பருவக்காற்று வீசி வருவதாலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி சென்னை கடலோரம் வழியாக தென் கடலோர மாவட்டங்களுக்கு நகர்ந்து வருவதாலும் தென்கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு நேரங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.