
மதுரை
விவசாயிகள் அனைவரும் கண்மாய்களில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுவதற்காகவே அம்மாவின் ஆட்சி விவசாயிகளுக்கு வயிற்றில் பாலை வார்த்து இருக்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கண்மாய்களில் வண்டல் மண் எடுக்கும் உரிமை சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். அவர், விவசாயிகளுக்கு கண்மாய்களில் வண்டல் மண் எடுப்பதற்காக சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
அவர் பேசியது: “விவசாயிகள் தங்களது நிலத்தில் உரமாக பயன்படுத்திக் கொள்ள தங்களது பகுதிகளில் உள்ள கண்மாய்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுவதற்காகவே அம்மாவின் ஆட்சி விவசாயிகளுக்கு வயிற்றில் பாலை வார்த்து இருக்கிறது.
வருவாய்துறை அதிகாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். குளமாக உள்ள கண்மாயை வண்டல் மண் எடுப்பதின் மூலமாக குழியாக்கி விடக்கூடாது. சமசீராக மண் எடுக்கப்பட வேண்டும்.
வண்டல் மண் எடுப்பதின் மூலம் கண்மாயை தூர்வாரியது போன்று இருக்கும். அதே சமயம் அந்த மண் விவசாய நிலங்களுக்கு உரமாகவும் மாறும்” என்று அவர் பேசினார்.
இந்த விழாவில் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஐயப்பன், தமிழரசன், வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.