
ஆதாரை பயன்படுத்தி ஏர்டெல் சிம் வாங்கியவர்களை கேட்காமலேயே அவர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு யூனிக் ஐடென்ட்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை பெரும்பாலானோர் இணைத்து வருகின்றனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கு விபரங்களை ‘கே.ஒய்.சி.’ மூலம் அறிந்துகொள்ளும் ஏர்டெல் நிறுவனம் தங்களது சிம் கார்டை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்களை கேட்காமலேயே அவர்கள் பெயரில் வங்கி கணக்குளை தொடங்குவதாக புகார்கள் எழுந்தன.
இதனால் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் உள்ளிட்ட சமூக நலத்திட்ட உதவிகளுக்கான தொகை ஏர்டெல் நிறுவனத்துக்கு சொந்தமான ’ஏர்டெல் பேங்கிங்’ வங்கி கணக்குகளுக்கு போய் சேர்ந்து விடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஒருவரின் ஒப்புதலை பெறாமல் அவரது விருப்பத்துக்கு மாறாக தாமாகவே முன்வந்து வங்கி கணக்குகளை ஏர்டெல் நிறுவனம் தொடங்குவது தனிநபர் உரிமையை மீறும் செயல் எனவும் புகார் எழுந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக உதய் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்திற்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதிலளித்த ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் நாங்கள் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கவில்லை. போதுமான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்துதான் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன என தெரிவித்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் பெயரில் கேட்காமலேயே வங்கி கணக்குளை தொடங்க ஏர்டெல் நிறுவனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது யூனிக் ஐடென்ட்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா.
மேலும், ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.