தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிக்காக வெளிநாட்டில் இருந்து 200 கோடி ஹவாலா பணம் கொண்டு வர இருப்பதாக வெளியான தகவலையடுத்து வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ஹவாலா பணத்தை கொண்டுவர முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணி- பறக்கும் படை சோதனை
நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் ரகசிய திட்டம் திட்டி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டில் இருந்தும் தொழில் அதிபரிகளிடம் இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையமும் வாகன சோதனையை தீவிர படுத்தியுள்ளது.இதுவரை இல்லாத அளவிற்கு 400கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை தேர்தல் பறக்கும் படை பிடித்துள்ளது.
அரசியல் கட்சிக்கு 200 கோடி ஹவாலா பணம்
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும், தேர்தல் செலவுக்காகவும், வெளிநாட்டில் இருந்து 200 கோடி ஹவாலா பணத்தை தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிக்கு கொண்டுவர ரகசிய திட்டமிடப்பட்டதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்கும் வகையில் விமானநிலையத்தில் தீவிரசோதனை நடத்தப்பட்டது. அப்போது கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஜோசப் மற்றும் வினோத் ஆகிய இரண்டு பேர் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட வினோத் மற்றும் ஜோசப்பிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த இரண்டு பேரும் துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டதைக் கண்டறிந்தனர்.
சிக்கிய ஆதாரங்கள்
இதனையடுத்த அந்த நபர்களிடம் இருந்து செல்போன், ஐ-பேட், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய அரசியல் கட்சிக்கு ஹவாலா மூலம் துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடியை கொண்டு வர அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்த நபர்களின் மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப் பதிவுகள் மூலம் 200 கோடி ரூபாய் கொண்டுவருவதை உறுதிசெய்தனர். வருமான வரித்துறையினரின் தீவிர நடவடிக்கை காரணமாக 200 கோடி ஹவாலா பணம் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.