கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்த கிடந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், மீன்கள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் தண்ணீர் மாதிரிகளை போலீசார் சோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கொசஸ்தலை ஆறு- செத்து கிடக்கும் மீன்கள்
சென்னை மணலி புதுநகருக்கு உட்பட்ட கொசத்தலை ஆற்றின் நீரோட்டம் உள்ளது. இந்த கொசத்தலை ஆற்றில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக அந்த பகுதிக்கு வந்துள்ளனர். அப்பொழுது அந்த ஆற்றில் மீன்கள் செத்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்ட அந்த பகுதி இளைஞர்கள் இது இது குறித்து ஊர் பெரியவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பல்வேறு வகையான மீன்கள் செத்த நிலையில் மிதந்து கிடக்கும் செய்தியானது அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல பரவியது.
இதனையடுத்து அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கையில் பிளாஸ்டிக் பாலித்தீன் பை மற்றும் கூடைகளில் ஆற்றில் இறங்கி செத்து கிடந்த மீன்களை பிடித்து தாங்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பாலித்தீன் பை மற்றும் சாக்கு மூட்டைகளில் மூட்டையாக கட்டி கொண்டு சென்றனர்.
மீன்கள் இறந்தது ஏன்.? காரணம் என்ன.?
இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த அந்த ஊரின் முக்கிய பிரமுகர்கள் இதுகுறித்து காவல்துறை மற்றும் மீன்வளத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆற்றில் இறங்கி மீன்களை அள்ளிக்கொண்டிருந்த பொதுமக்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து இந்த தண்ணீரின் மாதிரி மற்றும் இறந்து கிடந்த மீன்களின் மாதிரிகளை சேகரித்த காவல்துறையினர் இதுகுறித்து சென்னை கிண்டியில் உள்ள அரசு ரசாயன பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மீன்கள் இறப்பிற்கு தனிநபரின் செயலால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது கொசத்தலை ஆற்றில் வேறு ஏதேனும் வேதிப்பொருட்கள் கலந்து அதன் மூலம் இந்த மீன்கள் இறந்ததா என்கின்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.