
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் குடிநீர் இல்லாமல் தவித்துவந்ததால், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 69 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள நத்தம் அண்ணா நகர், மாதாகோவில் தெரு பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் மின்மோட்டார் பழுதானதால், கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், சீர்காழி- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் நத்தம் பகுதியில் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர், ஆய்வாளர் சிங்காரவேலு, உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்காமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் 20 பெண்கள் உள்ளிட்ட 69 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரையும் அருகில் இருந்த கோவிலில் தங்க வைத்துவிட்டு மாலையில் விடுவித்தனர்.