
மதுரை
நான்கு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலம், கள்ளர் சீரமைப்பு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை தத்தடுத்து அந்தப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்க்கும் முனைப்பில் இறங்கியுள்ளது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
ஆதிதிராவிடர் நலம், கள்ளர் சீரமைப்பு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிகள் தத்தெடுப்பு திட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் செயல்படுத்த உள்ளது.
இதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை, ஆசிரியர் கல்விவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தங்கசாமி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தங்கசாமி கூறியது:
ஆதிதிராவிடர் நலம், கள்ளர் சீரமைப்பு, மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கணிதம், அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில், அப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, காமராசர் பல்கலைக்கழக அதிகார வரம்புக்கு உள்பட்ட மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட மூன்று துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகள் தத்தெடுக்கப்படும்.
காமராசர் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை பேராசிரியர்களும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பேராசிரியர்களும் இணைந்து தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பர். தற்போது நடைமுறையில் இருக்கும் பாடத் திட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இப் பயிற்சி இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறியது:
"வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இதுவரை பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுடன் அங்குள்ள வளங்கள், நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் காரைக்குடி அழகப்பா, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மலேசியாவில் உள்ள பைனரி பல்கலைக்கழகத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இருந்து மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தலா 20 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்க உள்ளோம்.
தொழில்முனைவோர் பயிற்சி அளிப்பதுடன், திறமையான மாணவர்களுக்கு வங்கிக் கடன் வசதியும் ஏற்பாடு செய்துதர உள்ளோம். கல்லூரிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் வேலை அளிப்பவர்களாக உருவாகும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.